உங்க வாழ்க்கையை மாற்றப் போகும் துருப்புச் சீட்டு.. அரசின் தூதுவராக பெண்கள் ; உதயநிதி ஸ்டாலினின் விருப்பம்…!!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 12:36 pm

பெண் உரிமையை பாதுகாப்பதில் பெரியார் கண்ட கனவுக்கு திமுக அரசு செயல் வடிவம் கொடுத்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதில் ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மாநகராட்சி, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 8844 பயனாளிகளுக்கு சுமார் 157 கோடியே 33 லட்சத்தி 50972 ரூபாய் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகையில்:- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1200 டெபிட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இது பணம் எடுப்பதற்கான கார்டு மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் துருப்புச் சீட்டு. கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் இத்திட்டத்தை பின்பற்றுகிறது. பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுக்கு திமுக அரசு பேருந்து வடிவம் கொடுத்து வருகிறது.

கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய மூன்று வழிகளில் பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்படுவதாக பெரியார் கூறினார். இந்த மூன்று தடைகளை நீக்கினால் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று பெரியார் சொன்னார். அதன்படி பெண்களுக்கான சொத்துரிமை உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் திமுக அரசு பெண் உரிமையை பாதுகாத்து வருகிறது.

பெண்களின் கல்விக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. புதுமை பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. 31,000 பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைகின்றனர். இத்திட்டம் பெண்களின் சிரமத்தை போக்குகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை பொறுத்தவரை பெண்கள் உழைப்பிற்கு ஒரு அண்ணனாக இருந்து முதல்வர் இந்த திட்டத்தை கொடுத்துள்ளார்.

பெண்கள் எல்லோரும் தற்போது செல்போன் வைத்துள்ளீர்கள். வாட்ஸ்அப்பில் பல குறுஞ்செய்திகள் உங்களுக்கு வரும் அது உண்மையானதா? பொய்யா என ஆராய்ந்து ஷேர் செய்ய வேண்டும். உள்ளாட்சி பதவிகளில் 50% பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த சாதனையை நடத்திக் காட்டியது திராவிட மாடல் அரசு தான். பெரியார் கூறியதை போன்று பெண்கள் அனைவரும் முற்போக்குடனும், பகுத்தறிவுடனும், சுதந்திரமாகவும் சிந்திக்க வேண்டும். திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அரசின் தூதூவராக பெண்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும், என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 430

    0

    0