அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. நண்பர்களை அதட்டியதால் வெறிச்செயல் ; நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!
Author: Babu Lakshmanan16 November 2023, 11:30 am
நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக அரிவாளால் மர்ம நபர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தை ரெஜி என்பவர் ஓட்டி சென்றார். கண்ணன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். கல்லிடைக்குறிச்சி பகுதியில் பேருந்து சென்ற போது, திடீரென பைக்கில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்துள்ளனர்.

தொடர்ந்து பைக்கை ஓட்டி வந்த மர்ம நபர், தன்னுடன் வந்த இருவரை பேருந்தில் ஏற்றி விட்டுள்ளார். பின்னர், ஓட்டுனர் ரெஜி மற்றும் நடத்துனர் இருவரும் அந்த இரண்டு நபர்களை சத்தம் போட்டதாக தெரிகிறது. பஸ் ஸ்டாப்பில் ஏறாமல் நடுரோட்டில் வண்டியை மறித்து ஏறலாமா..? என நடத்துனர் கண்ணன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் தன்னை தகாத வார்த்தையால் திட்டுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் பைக்கில் கொலைவெறியோடு பேருந்தை பின்தொடர்ந்துள்ளார்.
வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற உடன் அங்கு பைக்கில் வந்த நபர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொண்டு ஓட்டுனர் இருக்கைக்கு ஆக்ரோஷமுடன் சென்றுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஓட்டுனர் ரெஜியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரெஜியின் இடது கண்ணத்தில் தொடங்கி மூக்கு வரை பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத ரெஜி நிலைகுலைந்துள்ளார். தடுக்க சென்ற நடத்துனர் கண்ணனுக்கும் லேசான வெட்டு விழுந்துள்ளது.
பின்னர் பேருந்தில் ஏறியிருந்த இரண்டு நபர்களை மீண்டும் பைக்கில் ஏற்றி கொண்டு ஓட்டுனரை வெட்டிய மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். வீரவநல்லூர் போலீசார் ஓட்டுனர்- நடத்துனர் இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுனர் ரெஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.