‘எங்கடா.. இங்க இருந்த படிக்கட்டை காணோம்’… படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் பயணிக்கும் அவலம்..!!
Author: Babu Lakshmanan9 February 2024, 7:36 pm
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லா பேருந்தில் பயணிகள் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வள்ளியூர் பணிமனைக்கு சொந்தமான இந்த அரசு பேருந்தில் இன்று பின்பக்கம் படிக்கட்டு இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்துடன் ஏறி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
மேலும், வயதான பெண்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் முன்பக்க வாசல் வழியே ஏறி இறங்க வேண்டிய சூழல் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டு பேருந்து உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லை மண்டலப் போக்குவரத்தில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது படிக்கட்டு இல்லாத மோசமான நிலையில் இருக்கும் பேருந்தை ஆபத்தான நிலையில் இயக்குவது போக்குவரத்து துறையில் அவல நிலையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
படிக்கட்டு இல்லா பேருந்து குறித்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆகவே நெல்லை மண்டல போக்குவரத்து துறையில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதை தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தரமான பேருந்துகளை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.