காவல்நிலையத்திலேயே கைவரிசை காட்டிய இளைஞன்.. புகார் கொடுக்க வந்த நபர்.. சில மணிநேரத்தில் ஷாக்கான போலீஸ்..!!
Author: Babu Lakshmanan30 August 2023, 6:48 pm
நெல்லையில் புகார் கொடுக்க வந்த இடத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரின் செல்போனையே அபேஸ் செய்த பலே திருடன் கையும் களவுமாக சிக்கினான்.
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரின் பயன்பாட்டிற்காக சியுஜி சிம் கார்டுடன் கூடிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை டவுன் காவல் நிலையத்திலும், அது போன்ற ஒரு மொபைல் போன் வழங்கப்பட்டு, காவல்துறையினரின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
நேற்றைய தினம் இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தனது செல்போன் உடன் சேர்த்து காவல் நிலையத்தில் உள்ள போனையும் காவல் நிலையத்தில் இருந்த மேஜை ஒன்றில் வைத்து விட்டு இரவில் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, அந்த எஸ்ஐ கண் அயர்ந்து தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது, டேபிளில் இருந்த இரண்டு செல்போன்களும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
‘மறந்து வேறு எங்கும் வைத்து விட்டோமா..?’ என காவல் நிலையத்தை சல்லடை போட்டு தேடியுள்ளார். ஆனாலும், செல்போன் கிடைக்கவில்லை. எனவே, செல்போன் திருடு போனது தெரிய வந்துள்ளது. செல்போன்கள் இரண்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வேறு வழியின்றி, இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எஸ்ஐ தகவல் அளித்ததன் அடிப்படையில், காவல் நிலையத்திலிருந்து செல்போன்கள் திருடு போனதா..? அல்லது வேறு எங்கேயும் விழுந்ததா..? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் நடைபெற்றது. இரவில் விசாரணைக்கு வந்த நபர்கள் யாரும் செல்போன்களை திருடி சென்று விட்டனரா..? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.
மக்களின் உடைமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவலர்களின் அலுவலகத்திலையே நடந்த இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தீவிர விசாரணைக்கு பிறகு செல்போன் திருடனை போலீசார் தற்போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இப்ராகிம் என்ற நபர், டவுன் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருவதும், கடந்த இரண்டு மாதமாக அவருக்கு கடையில் சம்பளம் கொடுக்காததால், அது குறித்து நள்ளிரவு புகார் செய்வதற்காக காவல் நிலையம் வந்தபோது, இரவு பணியில் இருந்த எஸ்ஐ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததை இப்ராஹிம் நோட்டமிட்டுள்ளார்.
வேறு யாரும் காவல் நிலையத்தில் இல்லாததை அறிந்து கொண்ட இப்ராகிம், வந்த வரைக்கும் லாபம் என்று நினைத்தபடி மேஜையில் இருந்த இரண்டு செல்போன்களையும் நைசாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காவல் நிலையம் மற்றும் அருகில் இருந்த பிற கடைகள் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இப்ராஹிமை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பளம் பாக்கியை வசூல் செய்து தரும்படி புகார் அளிக்க வந்த இடத்தில் காவல் நிலையம் என்று தெரிந்தும், செல்போனை திருடிய இப்ராகிமின் செயல் வேடிக்கையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.