கைதிகளுக்கு பல் பிடுங்கிய விவகாரம் : விசாரணை அதிகாரி நெல்லை மாவட்ட ஆட்சியருடன் திடீர் சந்திப்பு.. சூடு பிடிக்கும் விசாரணை..!!
Author: Babu Lakshmanan29 March 2023, 8:45 am
நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏஎஸ்பி ஆக இருந்த போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் குற்ற வழக்குகளுக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் கைதிகளிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கணவன்- மனைவி சண்டை, சிசிடிவி கேமராவை உடைப்பது போன்ற சிறிய வழக்குகளுக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்குவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
மேலும், கைதிகளின் வாயில் ஜல்லி கற்களை போட்டு கடிக்க சொல்லி சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து கூறும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஏஎஸ்பி மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகமது சபீரை விசாரணை அதிகாரியாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இதுகுறித்த விசாரணையை சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தொடங்கினார்.
மேலும் குறிப்பிட்ட தேதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தரும்படி சார் ஆட்சியர் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நேற்று மாலை பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர் என்ற நபர் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேசமயம் லட்சுமி சங்கரை டிஎஸ்பி பரனாபாஸ் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர். இதனால், ஏஎஸ்பி பல்வீர்சிங்கை காப்பாற்றும் நோக்கோடு காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறுமா என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கேள்வி எழுந்தது.
இது போன்ற சூழ்நிலையில் விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் முகமது சபீர், ஆலம்நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் மற்றும் நெல்லை எஸ்பி சரவணன் ஆகியோர் ஆட்சியர் கார்த்திகேயனை அவரது அறையில் சந்தித்து பேசினார். அப்போது, ஏஎஸ்பி மீதான புகார் குறித்த விசாரணையின் நிலை குறித்து ஆட்சியரிடம் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணை தொடர்பான சில ஆவணங்களையும் ஆட்சியரிடம் காண்பித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆலோசனை முடித்துக் கொண்டு ஆட்சியருடன் கீழே வந்தார். ஆனால் சார் முகமது சபீர் ஆலம் அவரது காரில் செல்லாமல் ஆட்சியர் கார்த்திகேயனுடன் அவரது காரில் சென்றார். இதன் மூலம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீதான விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது.