நெல்லை கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: விதிமீறல் காரணமா?….மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

Author: Rajesh
16 மே 2022, 9:52 காலை
Quick Share

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடி பொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன், இளையநயினார்குளத்தை சேர்ந்த செல்வம், விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

மேலும் அங்கு நின்ற 3 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்களும் பாறைகளில் சிக்கி நொறுங்கின. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கயிறு மூலம் குவாரிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய கடற்படை பருந்து ஹெலிகாப்டர் மீட்பு பணிக்கு வந்தது.

ஆனால் மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி, பேட்டை, நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மற்ற 4 பேரையும் மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2-வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், கல்குவாரி மேலாளர் செபஸ்டின், ஒப்பந்ததாரர் செல்வராஜ், குமார் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான உரிமையாளர் சங்கரநாராயணன், மேலாளர் செபஸ்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 876

    0

    0