நெல்லையில் பிரபல ரவுடி கொலை சம்பவம்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 9:38 am

நெல்லையில் பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சார்ந்தவர் தீபக் ராஜா (35). இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சாதிய மோதல் தொடர்புடைய பல்வேறு கொலை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர் மறைந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்தார். இதற்காக அந்தப் பெண்ணின் நண்பர்களுக்கு திருமண விருந்து அளிப்பதற்காக கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு சென்றுள்ளனர்.

அனைவரும் உணவருந்தி விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் உணவக வாசலிலேயே அரிவாளால் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் படுகாயமடைந்த தீபக் ராஜா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப் மற்றும் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: ரூ.4 கோடி விவகாரம்… சிபிசிஐடி சம்மனை எதிர்த்து வழக்கு… சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய பாஜக நிர்வாகி…!!

இந்த நிலையில்,தீபக் ராஜாவை கொலை செய்த குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பிரேத பரிசோதனை முடிந்த நிலையிலும், தீபக் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!