ஆதரவற்ற பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர்… சாலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை ; மர்ம கும்பல் வெறிச்செயல்..!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 11:12 am

நெல்லை பேட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது. இவருக்கு வயது 35. இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவர், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார். இவருக்கு ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் நண்பராக பழக்கம் ஏற்பட்டவர், நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த கலசலிங்கம். இவருக்கு சாந்தி மற்றும் பார்வதி என இரண்டு மனைவிகள் உள்ளனர்.

மூத்த மனைவி சாந்திக்கு வைரமுத்து என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் பணி செய்து வருகிறார். கலசலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கலசலிங்கத்திற்கு சொந்தமான சொத்தை பெறுவதற்கு பார்வதி முயற்சி செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், சொத்தை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில், அஸர் முகமது கடையில் பணி செய்த பேட்டை பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வீட்டிலிருந்து வெளியேறி இருக்க இடம் இல்லாமல் தவித்த நிலையில், அஸர் முகமது ஏற்பாட்டின் பேரில் பார்வதி வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கோடீஸ்வரன் நகர் பகுதியில் இருந்து அஸர் முகமது, நெல்லை பேட்டை விவிகே தெருவில் உள்ள பார்வதி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சொத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அஸர் முகமதை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து, அங்கிருந்து தப்பி ஓடிய அஸ்ர் முகமதை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி உள்ளனர்.

அப்போது பேட்டை விவிகே தெரு மற்றும் திருபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை இணைக்கும் மேல தெருவில் அஸர் முஹம்மது நிலைத்திடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் சரமாரியாக அஸ்ர் முகமதை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் அசர் முகமது உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணகுமார் மற்றும் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த பொருட்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கொலை குற்றத்திற்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கொடுக்கல், வாங்கல் தகராறு அல்லது நிலப்பிரச்சனை காரணமாக நடைபெற்றதா? பெண் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முன் அஸ்ர் முகமது இருந்த வீட்டில் உள்ள பார்வதி மற்றும் பகவதியை பேட்டை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 371

    0

    0