பாமக வேட்பாளரின் பிரச்சார யுக்தி : புளியை தட்டி வாக்காளர்களை கவர்ந்த திலகபாமா!!
Author: Udayachandran RadhaKrishnan11 April 2024, 7:32 pm
பாமக வேட்பாளரின் பிரச்சார யுக்தி : புளியை தட்டி வாக்காளர்களை கவர்ந்த திலகபாமா!!
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா இன்று நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, சாணார்பட்டி, செந்துறை, பிள்ளையார் நத்தம், சிறுகுடி, மணக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோபால்பட்டியில் திலகபாமா பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது பிரச்சார வாகனத்திற்கு வந்த ஒரு முதியவர் திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார்..
தமிழ்நாட்டில் இரண்டு கட்சி ஆட்சிகளினால் எந்த பயனும் இல்லை சாராயக்கடை தான் திறந்து வைத்து இருக்கிறார்கள். சாராயத்தை குடித்து குடித்து நிறைய பேர் இறந்து விட்டனர் அந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நானும் ஒருத்தன். எனது மகளின் கணவன் எனது மருமகன் சாராயம் குடித்து குடித்தே செத்து விட்டான். எனவே இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். வருங்கால சமுதாயத்தில் நம் பேரன் பேத்திகளாவது நல்லபடியாக வாழ வேண்டும் என்பதால் நாம் பாரத பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். பல்வேறு திட்டங்களை பாரபட்சமின்றி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறார் என நெகிழ்ச்சியுடன் பேசிய அந்த முதியவர் வேட்பாளர் திலகபாமா வெற்றிபெற ஆசீர்வாதம் வழங்குவதாக தெரிவித்தார்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்குறிச்சி பகுதிகளில் குடிசை தொழிலாக செய்து வரும் புளி தட்டும் பணியானது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தட்டி எடுக்கப்படும் புளி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். செங்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் திலகபாமா புளி தட்டும் இடத்திற்குச் சென்று அங்கு புளி தட்டியும், புளிக்கோதினை உருவி வேலை செய்தும் அங்கு வேலை செய்து வரும் பணியாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எஸ்.கொடை கிராமத்தில் வேட்பாளர் திலகபாமாவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் இதை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசிய திலகபாமா, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை வந்தால் நாம் வீட்டில் என்ன செய்யலாம்? முறுக்கு சுடலாமா? அதிரசம் சுடலாமா என்று யோசிக்கும் நிலையில் உள்ளோம். ஆனால் திமுக அதிமுக அரசுகள் 600 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் வருவாய் நிர்ணயம் செய்ய திட்டமிடுகிறது. இதை உணர்ந்து நமக்கான தலைவர் யார் என அவர் எங்கு கை நீட்டுகிறார் என்று பார்த்து நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
ஒரு நூறு ரூபா பணம் கிடைக்காதா என்ற நிலையிலிருந்து தான் வந்தவர்கள் நாங்கள். கல்வி இருந்ததால் மட்டுமே இந்த வளர்ச்சி எனக்கு கிடைத்தது. என் மாமியார் சொல்வார், சரஸ்வதியை கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக் கொள். லட்சுமி தானாக உன்னை தேடி வருவாள் என கூறுவார். எல்லோரும் லட்சுமியை தேடிச் செல்வார்கள். ஆனால் நீங்கள் சரஸ்வதியை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளுங்கள். லட்சுமி உங்களுக்கு தானாக வரும்
இப்பகுதியில் புளி விளைச்சல் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதை விவசாயியாகவும் ஒரு கூலி ஆட்களாகவும் இருந்த நிலையில்தான் இதை பார்க்கிறோம். இதை மாற்றி பதப்படுத்துகிற தொழிற்சாலையாக கொண்டு வந்தால் நமக்கு பயன் தரும். நம் பிள்ளைகள் படித்து முடித்து வேலைக்காக சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளை தேடிச் செல்லும் நிலையை மாற்றி நம் மண்ணையும் நம் நிலத்தையும் நம் குடும்பத்தையும் நம் குல தெய்வத்தையும் விட்டுப் போக வேண்டிய நிலை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
நிலம் விட்டு ஒருவர் இடம்பெயர்ந்து சென்றால் அவரின் வாழ்வியல் போய்விடும். எனவே வாழ்வியலை நாம் காக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் போராடி வருகிறோம். வாழ்வியலை விட்டு வெளியில் சென்றால் ஏற்படும் வலியை உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்ந்த வலியோடு உங்கள் வலியோடு கைகோர்த்து பயணிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவரும் மாம்பழ சின்னத்தில் வாக்களியுங்கள் என தெரிவித்தார்.