சீமானுக்கு புதிய சிக்கல்.. ஒரு பக்கம் நடிகை.. இன்னொரு பக்கம் சர்ச்சை : காவல்துறை போட்ட சம்மன்!!

Author: Rajesh
1 September 2023, 10:20 pm

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டனர்.

நாதக வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பட்டியலினத்தில் உள்ள அருந்ததியர் மக்கள் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

தமிழகத்தைச் சேர்ந்த அருந்ததியர் மக்கள் துப்புரவு தொழிலுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எனக் கூறியிருந்தார் சீமான்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அருந்ததியர் மக்களும், அமைப்புகளும் நாம் தமிழர் கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பல இடங்களில் சீமானின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. சீமான் பேச்சு தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தான் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளனர். செப்டம்பர் 9ஆம் தேதி சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். தாங்கள் அனுப்பிய சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

அண்மையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில், திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது அருந்ததியர் மக்கள் பற்றி தவறாக பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!