அடுத்து மாநகராட்சி ஊழல் பட்டியல் வெளியாகும்… தமிழகத்தில் எங்க தலைமையில் தான் கூட்டணி ; பாஜக அடுத்தடுத்து டுவிஸ்ட்!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 4:38 pm

மாநகராட்சி ஊழல் பட்டியல் வெளியாகும் என்றும், தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி மதுரை பாஜக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:- மதுரையில் ஆருத்ரா ஊழலை காரணம் காட்டி பாரதிய ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ள கிருஷ்ண பிரபு, ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர். ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்.

தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற பொது தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது பற்றி உயர் மட்ட குழு கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும். எங்களைப் பொருத்தவரை பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். அதாவது, கடந்த 2009-ம் ஆண்டு பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான கூட்டணி, தனித்துப் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும்.

இல்லையென்றால் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பது மதுரை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே மாநில தலைமைக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம். மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது.

இதற்கான ஆடியோ எங்களிடம் வந்து உள்ளது. அதேபோல குடிநீர் இணைப்புக்கு 50 ஆயிரம் ரூபாயும், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய 10 ஆயிரம் ரூபாயும் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்தேறி உள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். கூடிய விரைவில் இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப்படும். தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள், போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன.

அண்ணாமலை திமுக நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதனை திருப்புவதற்காக, தேவையற்ற விவரங்களை திமுக பெரிதுபடுத்தி வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் பதவிக்கு வெற்றிடம் நிலவி வருகிறது. அதனை நிரப்புவதற்காக அண்ணாமலை வந்து உள்ளார். சூரியன் சுட்டு எரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இலைகள் உதிர்ந்து வருகின்றன. கூடிய விரைவில் மழை பெய்யும். அப்போது தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும், அவர் தெரிவித்தார்

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!