ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட் : சிக்கிய காங்., நிர்வாகி.. செல்வப்பெருந்தகை ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 1:18 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை ஜூலை 14ஆம் தேதி அதிகாலை விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ரெட்டேரி பகுதியில் இயற்கை உபாதைக்காக காவல் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

அப்போது, திருவேங்கடம் தப்பி ஓடி, புழல் வெஜிடேரியன் நகர் பகுதியில் ஒரு தகர கொட்டகையில் பதுங்கியுள்ளார் திருவேங்கடம். அங்கு அவர் வைத்திருந்த துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இதனால் திருவேங்கடம் தவிர்த்து தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20 பேர் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் மேலும் ஒரு கைது நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்துள்ளனர். அதாவது பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பொன்னை பாலு உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தனிப்படை போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில் பல்வேறு முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் அந்த தகவல்களின் அடிப்படையில் மீண்டும் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என செம்பியம் காவல் ஆய்வாளர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் பொன்னை பாலு உள்ளிட்ட ஐந்து பேரை 7 நாள் போலீஸ் காவல் விசாரிக்க அனுமதி அளித்தது.

இதை அடுத்து பொண்ணை பாலு, அருள் உள்ளிட்டோரிடம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனும் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தமனை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

அஸ்வத்தமனை கைது செய்வதற்கு அருள் கொடுத்த தகவல் தான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியதாக இளைஞர் தலைவர் லெனின் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 188

    0

    0