ஆபிசுக்குள் புகுந்து அறக்கட்டளை நிறுவனருக்கு சராமாரி அரிவாள் வெட்டு: கஞ்சா கும்பலை காட்டி கொடுத்ததால் வெறிச்செயல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…
Author: Babu Lakshmanan30 December 2022, 1:11 pm
ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கணக்காளரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாலகுமரேசன் (45). ஆதவா அறக்கட்டளை நிறுவனரான இவர், நேற்று ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.
இதனை தடுக்க முயன்ற அவரது கணக்காளர் ராஜமணியாபுரத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் ராஜமாணிக்கம் (25) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த பாலகுமரேசன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கணக்காளர் ராஜமாணிக்கம் காயல்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆறுமுகநேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சட்டவிரோத கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலகுமரேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக அவர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜமணியாபுரத்தைச் சேர்ந்த சூசைராஜ் மகன்கள் பிரதீப், பிரவீன், திலகர் மகன் அலெக்ஸ் ரூபன், பாப்பையா மகன் அருண் உட்பட 7பேரை போலீசார் தேடி வருகின்றனர்.