சூடுபிடிக்கும் கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து இருவரிடம் என்ஐஏ விசாரணை..!!
Author: Babu Lakshmanan27 September 2023, 11:52 am
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை நேரில் அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 13 வது நபராக அசாருதீன் என்பவர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் கொச்சி சிறையில் வேறொரு வழக்கு சம்பந்தமாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற அனுமதி பெற்று NIA அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசாருதீனை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் 12வது நபராக கைது செய்யப்பட்ட இத்ரீஸ் என்பவரையும் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கோவையில் அவ்வப்போது இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை நேரடியாக அழைத்து வந்து அவர்களது இல்லங்களிலும் பல்வேறு இடங்களிலும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.