வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூல்… நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ; முக்கிய நிர்வாகிகளுக்கு NIA சம்மன்…!!
Author: Babu Lakshmanan2 February 2024, 11:07 am
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நன்கொடை வசூலித்தது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட, ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டு உருவாக்குவோம்’ என்று கூறி, கடந்த, 2022ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில், 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை தமிழர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வைத்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதி முகாமில் இருந்த, 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில், திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் சாட்டை துரைமுருகன் வீட்டிற்கு, இன்று அதிகாலை, என்ஐஏ துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், 5அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்தனர். அவரது வீட்டை சோதனையிட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்களை கைப்பற்றினர்.
சாட்டை துரைமுருகன் சென்னையில் உள்ள நிலையில், வீட்டில் இருந்த அவரது மனைவியிடம், ‘வரும், 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் துரைமுருகன் ஆஜராக வேண்டும்’ என்று சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதேபோல, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை செய்தனர்.
வரும், 7ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டு சென்றனர்.
மேலும், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கும், இதே விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வரும்,ஏழாம் தேதி ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் தபாலில் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகை வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்று கூறப்படும் நிலையில், இவர் தென்னகம் என்ற youtube சேனலை கடந்த 2020 டிசம்பர் 27ஆம் தேதி முதல் நடத்தி வருகிறார். தனது youtube சேனலில் 279 வீடியோ பதிவுகளை பதிவிட்டுள்ள இவர், நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் குறித்து தனது youtube சேனலில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் NIA அதிகாரிகள் இவரது வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த சோதனை 10.00 மணி அளவில் நிறைவு பெற்றது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளனவா என 6 பேர் கொண்ட NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவருக்கு இலங்கைத் தமிழர்கள் உட்பட வேறு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா, வெளிநாட்டிலிருந்து பணம் ஏதும் பெற்றுள்ளாரா என்பன குறித்து விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காலை 10 மணி அளவில் நிறைவுற்ற இச்சோதனையில் ஒரு மொபைல் போன் மற்றும் பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய நான்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. NIA சோதனையால் இளையான்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.