அதிகாலையில் தமிழகத்தில் அதிரடி…எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan23 July 2023, 10:22 am
கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இதில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் இன்று ஒரே நேரத்தில் 24 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.