விடிய விடிய பெய்த கனமழை… குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ; கடும் போக்குவரத்து பாதிப்பு..!!
Author: Babu Lakshmanan23 November 2023, 11:29 am
தொடர் கனமழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு, பாறைகள் விழுந்ததால் இன்று அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குன்னூர் – மேட்டுபாளையம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நான்கு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.