அமைச்சர் உதயநிதி கொடுத்த நெருக்கடியால்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி பயணிக்கிறார் : வைகோ விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2023, 3:35 pm
அமைச்சர் உதயநிதி கொடுத்த நெருக்கடியால்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி பயணிக்கிறார் : வைகோ விமர்சனம்!!
இன்று தந்தை பெரியார் அவர்களின் 50 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர் மரியாதை செலுத்தும்போது அவருடன் அவருடைய மகன் துரை வைகோவும் இருந்தார்.
மரியாதையை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ” தந்தை பெரியார் சமூக நீதியின் ஒரு வடிவமாக திகழ்ந்து வருகிறார். இளைஞர்கள் பலரும் தந்தை பெரியாரை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கூட்டம் தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு அவமதிப்பு செய்கிறது.
அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லவருவது என்னவென்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்பது தான். இப்படி பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என்று யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது” எனவும் எச்சரித்தார். அதனை தொடர்ந்து மேலும் பேசிய வைகோ ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்திய அமைச்சர்கள் சரியாக பார்வையிடவில்லை என்று கூறியதன் காரணமாக தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார்” எனவும் கூறியுள்ளார்.
மேலும், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருகிறார். அதன்படி, நாளை மறுநாள் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் தூத்துக்குடியில் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.