என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கவுன்சிலர்… சிறைபிடித்த பொதுமக்கள்.. கடலூரில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan9 May 2023, 12:13 pm
கடலூர் ; கடலூர் என்எல்சி விவகாரம் தொடர்பாக விண்ணப்ப படிவத்துடன் வந்த திமுக கவுன்சிலரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராம மக்களிடம் திமுக கவுன்சிலர் செல்வராசு என்பவர் தலைமையில், கத்தாழை ஊராட்சி செயலர் முன்னிலையில் எங்கள் பகுதி மனை, நிலங்களை நாங்கள் அளக்க சம்மதிக்கிறோம் என்று நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட படிவத்தை காட்டி சிலரிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியை தொடங்கினர்.
இதனை அறிந்த கரிவெட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திமுக கவுன்சிலரை சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேசாமல் திரும்பிச் செல்லுங்கள் எனவும், எங்களது கோரிக்கை சமகால இழப்பீடு வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை, அதை நிறைவேற்றி விட்டு உள்ளே வாருங்கள் எனவும், கரிவெட்டி கிராம மக்கள் திமுக கவுன்சிலர் மற்றும் ஊராட்சி செயலரை திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நிலம், மனல அளவீடு செய்வதற்கான படிவத்தை நில எடுப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் என்எல்சி அதிகாரிகள் தான் நேரில் சென்று கிராம மக்களிடம் ஒப்புதல் பெற்று படிவம் கையெழுத்து வாங்க வேண்டும்.
ஆனால் திமுக கவுன்சிலர் தலைமையில் படிவத்தில் கையெழுத்து வாங்க முயற்சி செய்த சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிருப்தியையும் வேதனையும் ஏற்படுத்தி வருகிறது.