10 வருடத்திற்கு முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2023, 4:44 pm
10 வருடத்திற்கே முன்பே கையகப்படுத்தும் நிலத்துக்கு பணம் கொடுத்துள்ளது என்எல்சி : ஆட்சியர் விளக்கம்!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை இன்று காலை என்எல்சி நிர்வாகம் தொடர்ந்தது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி துவங்கியது.
விளை நிலங்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் நிலம் கையகப்படுத்தும் போது பாதுகாப்பு கருதி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தற்போது இந்த விவகாரம் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறுகையில், மேல்வலையமாதேவி பகுதியில் தற்போது என்எல்சி நிர்வாகம் ஏற்கனவே கையப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் வேலையை தொடங்கி உள்ளார். இந்த நிலங்கள் 2006-2013 காலகட்டத்திலேயே என்எல்சி நிர்வாகத்தினால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டு விட்டது. என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த டிசம்பர் மாதமே, இந்த இடங்களில் பயிரிட வேண்டாம் என என்எல்சி நிர்வாகத்தினர் அறிவித்து விட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக சுரங்க விரிவாக்க பணிகள் நடைபெறாமல் இருப்பதால் விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர்.
தற்போது மின்தட்டுப்பாடு நிலவி வருகிறது. என்எல்சியிடம் போதிய நிலக்கரி எடுக்க நிலம் இல்லை. எனவே, அதற்கான வேலைகளை என்எல்சி ஆரம்பித்துள்ளது.
இந்த இரண்டாம் கட்ட நிலம் கையகப்படுத்துதலில், 74 பேர் உள்ளார்கள். அதில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்திற்கான தொகை வாங்கி விட்டனர். தற்போது என்எல்சி சார்பில் கூடுதல் கருணை தொகையும், விவசாய பயிர்க்கான இழப்பீடும் தருவோம் என என்எல்சி கூறியுள்ளது. கடந்த ஒரு வாரம் முன்னரே கிராம மக்களிடம் தெரிவித்தோம்.
வேளாண்துறை அமைச்சர் உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே 264 ஹெக்டேருக்கு கூடுதலாக கருணை தொகை அறிவித்தார்கள். இந்த கருணை தொகை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 26 வரையில் 10 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அதில் கூடுதல் கருணை தொகையும், பயிர் இழப்பீடு தொகையும் வழங்கப்பட உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார்.