அமைச்சரும் சொன்னாரு… ஆனா, எந்த வசதியும் இல்ல ; எதுக்கு எடுத்தாலும் காசு… திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கண்ணீர் வடிக்கும் நோயாளிகள்!!
Author: Babu Lakshmanan8 December 2022, 1:46 pm
திண்டுக்கல் ; திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எந்தவித அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருப்பதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில், தற்போது வரை மருத்துவக் கல்லூரிக்கு உரிய எந்த ஒரு மருத்துவர்கள் இல்லாதது பொதுமக்களையும், நோயாளிகளையும் வேதனை ஏற்படச் செய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராம சூழ்ந்த மாவட்டமாகும். சுமார் பத்து தாலுகாக்கள் உள்ளன. இந்நிலையில் மக்களுக்காக உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரியில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களோ, பணியாளர்களோ கிடையாது. சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளையும், நோயாளிகள் உறவினர்களையும் மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக, பல்வேறு கட்டிடங்கள், சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதையே காரணம் காட்டி தொடர்ந்து மருத்துவத்துறையில் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கூறும் பொழுது ;- தனது மகளை பிரசவத்திற்காக பிரசவ வார்டில் சேர்த்துள்ளோம். இங்கு சுகாதாரம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. மேலும், ஆண் குழந்தை பிறந்தால் 2000, பெண் குழந்தை பிறந்தால் ஆயிரம் என கட்டாய பண வசூல் செய்கின்றனர்.
ஸ்ட்ரெச்சர் தள்ளும் ஊழியர்கள் கூட 200 ரூபாய், 300 ரூபாய் பணம் கேட்கின்றனர். பிரசவத்திற்கு வரும் பெண்கள் பணம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் நிலைமை மிகப்பெரிய அளவில் மோசமான சூழ்நிலையை பிரசவ வார்டில் உள்ளவர்கள் ஏற்படுத்தி விடுகின்றனர். மேலும், பிரசவ வார்டில் உள்ள பணியாளர்கள் நோயாளிகளையும், நோயாளிகளின் உறவுகளையும் தரக்குறைவாக பேசுவதும், தரை குறைவாக நடத்துவதுமாக உள்ளனர்.
அதேபோல் லஞ்சம் கேட்பது குற்றம் என இருந்து வரும் நிலையில், பிரசவ வார்டில் லஞ்சத்தை மிரட்டி வசூல் செய்பவர்கள் மீது யாரிடம் புகார் அளிப்பது என்பது தற்போது வரை தெரியவில்லை. பிரசவ வார்டில் கண்டிப்பாக லஞ்சம் குறித்து சுவரொட்டி வைக்க வேண்டும். அதில் உரிய செல் நம்பர் வைக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் சிசிடிவி இயங்கவில்லை. அதேபோல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், தங்குவதற்கு உரிய இடமில்லாமல் மரத்தடியில் நின்று கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் நோயாளிகள் உறவினரிடம் இருந்து செல்போன் உட்பட பணங்களை திருடிச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி ரத்தப் பரிசோதனைக்கு அனுப்பினால், அங்குள்ளவர்கள் அலட்சியமான பதிலே சொல்கின்றனர். ஒரு மணி நேரத்தில் வாங்கி வர வேண்டும் என மருத்துவர்கள் கூறும்பொழுது, ரத்தப் பரிசோதனையில் மிகவும் அலட்சியமாக, 6 மணிக்கு கொடுத்தால் இன்னும் ஒரு மணி நேரம் சொல் என்று சொல்லி சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக அலைக்கழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,
ஆனால் மருத்துவரிடம் கேட்கும் பொழுது உரிய மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்று கூறுகின்றனர். ஆனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரம் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது வரை பொதுமக்களுக்கு எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல். இங்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனை குறித்து இரண்டு, மூன்று முறை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். ஆனால் ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆதரவாகவே பேசி உள்ளார்.
ஆனால், இங்கு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுப் பொருட்கள் கூட சுகாதாரம் இல்லாமல், மூடப்படாமல் திறந்த வெளியில் அப்படியே கொண்டு வரப்படுகிறது. பால், முட்டைகள் அனைத்தும் ஈக்கள் அமர்ந்து விளையாடும் சூழ்நிலை உள்ளது.
முட்டைகள் உடைந்து வாழைப்பழம் உரிந்த நிலையில் கொண்டு வருகின்றனர். தற்போது வரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மக்களுக்கு பயன்படாமல், அதிகாரிகளுக்கு பயன்பெறும் வகையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக இயங்கும். இல்லையென்றால் சீர்கேட்டு போகும் என நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.