‘உதவி பணியாளரே இல்ல… எல்லா வேலைகளையும் ஒத்த ஆளா பாக்குறேன்’ ; அங்கன்வாடி பணியாளரின் குமுறல் வீடியோ..!!
Author: Babu Lakshmanan19 November 2022, 11:06 am
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பராமரிக்க உதவி பணியாளர் இல்லை என்று குழந்தைகள் பராமரிப்பில் இருக்கும் பணியாளரின் குமுறல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் குறைந்தது 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை பராமரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகமான அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் தட்டுப்பாட்டு காரணமாக குழந்தைகளை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்குள் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் உள்ள பணியாளர் அங்கு உதவி பணியாளர் இல்லை என தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
தற்போது, இங்கு உணவு சமையல் பண்ணுவதற்கும், குழந்தைகளை பராமரிப்பதற்கும், எழுத்து கற்பித்து கொடுப்பதற்கும் பணியாளர்கள் இல்லை என்றும், ஒரே அலுவலராக தான் மொத்த பணிகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் குழந்தைகளை பரமாரிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், அலுவலர்கள் சொல்லும் வேலையை அந்த பகுதியில் சென்று கணக்கெடுத்து பின்பு அங்கன்வாடி மையத்திற்கு வந்து ஊட்டச்சத்து மாவுகளை கர்பிணிகளுக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறிய அவர், உதவி பணியாளர்கள் இல்லாதததால், குழந்தைகளின் சேர்க்கை குறைந்த அளவே இருப்பதாக கூறினார்.
இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்த பிறகும் அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிடவும் இல்லை என்றும், மாவட்ட ஆட்சியரும் இங்கு வந்து பார்த்ததில்லை எனவும் தனது குமுறலை புலம்பி தீர்த்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சியானது வைரலாகியுள்ளது.