ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 July 2023, 1:47 pm
ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம், 2வது சுரங்க விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணியை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. அதன்படி, மேல்வளையமாதேவி கிராமத்தில் விளை நிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது.
விளை நிலங்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது என்எல்சி நிர்வாகம் பணி தொடங்கியுள்ள இடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கையகப்படுத்தப்பட்ட நிலம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சமயத்தில், நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கிய என்எல்சி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்தவகையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக இன்று பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அறிவித்திருந்தார். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் போராட்டம் நடத்தப்படும்.
விளைநிலங்களை அழித்தால் வருங்காலத்தில் உணவு கிடைக்காது. என்எல்சி நிறுவனம், விவசாய நிலங்களுக்கு இழப்பீடாக எவ்வளவு கொடுத்தாலும் தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக என்எல்சி முற்றுகை போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால் தீவிர கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டம் உள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்த முற்றுகை போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், என்எல்சி தனது பணியை தொடர்ந்தால் நாளை கடலூர் மாவட்டத்தில் சாலை மறியல் நடைபெறும்.
கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை சாலை மறியல் நடத்தப்படும். 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்னை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்னை.