நதிகளின் தூய்மையை கெடுக்கலாமே தவிர.. புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 5:00 pm

நதிகளின் தூய்மையை கெடுக்கலாமே தவிர.. புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேச்சு!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று வருகை தந்தார். பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான தண்டபாணி நிலையத்திற்கு வருகைதந்த ஆளுநர் இல. கணேசனுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் இல. கணேசன் தெரிவித்ததாவது :- சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் ஆகியோர் தொடர்பான விழாவில் பங்கெடுக்க மதுரை வந்ததாகவும், தொடர்ந்து கோவையில் நடைபெறும் உலகளாவிய தமிழர்கள் மாநாடு நிகழ்ச்சியில் பங்கெடுக்க சாலை மார்க்கமாக செல்லும் வழியில் பழனி முருகனை தரிசிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

பழனி வையாபுரி கண்மாய் அசுத்தமான நிலையில் இருப்பதாகவும், குளத்தை சுத்தப்படுத்தி புனிதத்தை காக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என செய்தியாளர்கள் கேட்டபோது, புண்ணிய நதிகளின் புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது, அவற்றின் தூய்மையை மட்டுமே கெடுக்க முடியும் என்றும், இதுகுறித்து முழு தகவல்களை பெற்று மத்திய அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார். பழனி மலை கோவிலுக்கு சென்று பழனி முருகனை தரிசனம் செய்தார்.

ஆளுநர் இல.கணேசனை, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கனகராஜ், வழக்கறிஞர் திருமலைசாமி உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu