தமிழ் பெயர் வைப்பதில் அரசியல் வேண்டாம் : கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு? : வைரமுத்து விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 10:01 pm

நாளை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது. அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை “வைரமுத்து இலக்கியம் 50” என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை நண்பர்கள் என் மீது நிபந்தனை இல்லாத பாசம் வைத்தவர்கள் என்று தெரிவித்தார்.

இந்த 50 ஆண்டுகளில் நான் சாதித்தது எதுவும் இல்லை எனவும் நான் பெற்ற விருதுகள் எல்லாம் சாதனைகள் என சொல்லிவிட முடியாது எனவும் அவை எல்லாம் உடன் விளைவுகள் என தெரிவித்தார். இனிமேல் தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன ஊட்ட கருத்துக்கள் சொல்ல வேண்டும்? புத்தம் புதிய படைப்புகள் என்ன படைக்க வேண்டும்? இருக்கின்ற இடைவெளியை எப்படி நிரப்ப வேண்டும்? என்று சிந்திக்க கூடிய வயதில் நான் இருக்கிறேன் எனக் கூறினார்.

மேலும் நாளை நடைபெற உள்ள விழாவில் கவிஞர்கள் திருநாள் விருதை வழங்க உள்ளதாகவும், சக்தி ஜோதி என்பவருக்கு விருது வழங்க உள்ளதாகவும் கூறினார். நாளை நடைபெறும் பெரும் விழா தமிழர்களின் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் தமிழின் கோலாட்டமாக இருக்கும் எனவும் உணர்ச்சி பூர்வமான விழாவாக இருக்கும் எனவும் தமிழின் புகழ் பாடுகிற திருவிழாவாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் பத்திரிக்கைகளால் தான் எனது படைப்புகள் வளர்ந்தது என்று சொல்லிக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 1992ம் ஆண்டு நடந்த எனது “சிகரங்களை நோக்கி” என்ற விஞ்ஞான கவிதை நூல் இங்குதான் வெளியிடப்பட்டதாகவும் அது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றும் தெரிவித்தார்.

மேலும் 60ம் ஆண்டு பிறந்த நாளும் கோவையில் தான் கொண்டாடப்பட்டதாகவும் அதில் அப்துல் கலாம் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியது (வைரமுத்து 60 முறை சூரியனை சுற்றி வந்திருக்கிறார்) என்றும் மறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சினிமா பாடல்களை பொறுத்தவரை கொண்டாட்ட கருவி, கற்பிக்கிற கருவி(இலக்கியம்) என இரண்டு உள்ளதாகவும், இலக்கியம் ஒரு பக்கம் கொண்டாட்டம் ஒரு பக்கம் என இருந்த சினிமா தற்பொழுது கொண்டாட்டம் மட்டுமே போதும் என்று குறுகி விட்டதாகவும் அது கலை விபத்து எனவும் சாடினார்.
மேலும் வெகு விரைவில் இலக்கியம் பாதி கொண்டாட்டம் பாதி அல்லது இலக்கியமே முழுமை என்ற நிலைமைக்கு சினிமா வரும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ் பெருமக்கள் அருள் கூர்ந்து இலக்கிய பாடல்களை கொண்டாடுங்கள் எனவும் இலக்கிய பாடல்களை மேற்கோள் காட்டுங்கள் எனவும் இலக்கிய பாடல்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள் எனவும் கல்லூரிகளில் விழா கொண்டாடுகின்ற கல்லூரி நிறுவனங்களும் மாணவ மாணவியரும் கல்லூரி விழாக்களில் இலக்கிய பாடல்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இது போன்ற இலக்கிய பாடல்களுக்கு அபிநயம் பிடித்தால் நம்முடைய ரசனை மேலும் மேலும் வளர்கிறது என்று பொருள் என தெரிவித்தார். 1960களில் நாங்கள் படிக்கின்ற பொழுது ஜெயகாந்தன், பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், மெளனி, கண்ணதாசன், சுரதா, வாணிதாசன், முடியரசன் போன்ற கவிஞர்கள் இருந்தார்க்ள் என தெரிவித்த அவர், அப்போது அச்சு ஊடகங்கள் அதிகம் இருந்ததாகவும் அச்சு ஊடகங்கள் தான் இலக்கியத்தை எப்பொழுதும் தூக்கி நிறுத்தியதாக கூறினார்.

மேலும் கை தொலைபேசி வந்த பிறகு இந்த உலகம் இயேசுவுக்கு முன் இயேசுவுக்கு பின் என்பது போன்று கைபேசிக்கு முன் கைபேசிக்கு பின் என்று மாறிவிட்டதாக தெரிவித்த அவர் இந்த மாற்றத்தை நம்மால் தவிர்த்து விட முடியாது எனவும் விஞ்ஞானம் என்பது ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம் தலை மீது சவாரி செய்யும் ஆனால் எந்த அளவிற்கு சவாரி செய்ய விடலாம் என்பதை சமூகம் தான் தீர்மானிக்க முடியும் என கூறினார்.

அதேபோல் இலக்கியத்தை தேர்ந்தெடுத்து படிப்பதை மாணவர்களும் ஆசிரியர்களும் உண்டாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து பள்ளிகளிலும் வாரத்தில் இரண்டு வகுப்புகள் இலக்கிய வாசிப்பு வகுப்பு என்று ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வித்துறைக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

சோறு என்பது தற்பொழுது சாதம் என நடைமுறையில் மாறி வருவதாக கூறியதற்கு கருத்து தெரிவித்த அவர் சோறு என்பது தமிழனின் பொது சொல் எனவும் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது எனவும் கூறினார். மேலும் தமிழர்கள் பேசுகின்ற பொழுது தமிழில் பேசுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் தமிழர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என கேட்டுக்கொண்ட அவர் அப்போது தான் பள்ளிக்கூடங்களில் தமிழ் பெயர் உச்சரிக்கப்படும் எனவும் பங்கீட்டு அட்டை கடவுச்சீட்டு ஆகிய இடங்களில் தமிழ் பெயர் இடம் பெறும் எனவும் குறைந்தது நீதிமன்றங்களிலாவது தமிழ் பெயரை உச்சரிக்கின்ற வாய்ப்பு கிட்டும் என தெரிவித்தார். இதில் அரசியல் பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும் புவியியல் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் பாடம் நடத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருவதற்கு பதிலளித்த அவர், பிற பாட ஆசிரியர்கள் தமிழ் தெரிந்து அதனை கற்றுக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனவும், அதேசமயம் தமிழை முறையாக படித்தவர்கள் தான் இலக்கணம் சொல்லித் தர முடியும் என தெரிவித்தார்.

அடிப்படை தெரிந்த தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ் கட்சி கொடுத்தால் தான் அடுத்த தலைமுறை வளரும் என தெரிவித்தார். ஆசிரியர்க்ள் என்பவர்கள் கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும் அல்ல, கற்பதை நிறுத்தாதவர்கள் என்றுதான் நான் கருதுகிறேன் என கூறினார்.

மேலும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அறிஞர்களும் அரசுத்துறை அதிகாரிகளும் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டால் இதற்கெல்லாம் நிவாரணம் காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் மிக நல்ல படைப்புடன் விரைவில் தமிழ் மக்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார். கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என்ற பல இயக்குனர்கள் தன்னை கேட்டதாகவும், அப்போது என்னிடம் ஒரு தயக்கம் இருந்தது எனவும் தெரிவித்தார்.

நாவல் படமாக்கப்படுகின்ற பொழுது இரண்டு விதமான விளைவுகள் உண்டு அதாவது, நாவலை இருப்பதை விட சிறப்பாக எடுத்துக்காட்டுவது ஒன்று மற்றொன்று நாவலில் இருப்பதை விட குறைவாக மாறிவிடுவது என இரண்டு உண்டு என தெரிவித்தார்.

மேலும் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக தெரிவித்த அவர் ரஜினி இதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் முதல்வர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 801

    0

    0