வேலை தேடி வந்த வடமாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சடலம் அருகே அழுது கொண்டிருந்த தம்பி : விசாரணையில் சிக்கிய 4 பேர்!!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2022, 7:24 pm
திருப்பூர் : பல்லடம் அருகே உத்திர பிரதேசத்தை சேரந்த வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவத்தில் பிரபல தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த 63 வேலம்பாளையம் காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபரது உடல் கிடப்பதாகவும், அதன் அருகில் காயங்களுடன் ஒரு நபர் அழுது கொண்டிருப்பதாகவும் மங்கலம் காவல் நிலையத்துக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த மங்கலம் காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் காயங்களுடன் அழுது கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராஜ்குமார், பிராஜ் லால் என்பதும் சகோதரர்களான இருவரும் நேற்று வேலை தேடி திருப்பூர் வந்ததும் தெரிய வந்தது.
திருப்பூர் வந்த இவர்கள் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தனியார் வேலை வாய்ப்பு (பர்பெக்ட் லேபர் சொல்யூசன்) நிறுவனத்தை அனுகியுள்ளனர். சகோதரர்கள் இருவருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சம்பளம் போதவில்லை என கூறி சகோதர்கள் இருவரும் கூறியதால் மீண்டும் நிறுவனத்திற்கே வந்துள்ளனர். இரவு 11 மணி அளவில் இருவரையும் வேலை இருப்பதாக கூறி நிறுவனத்தினர் அழைத்த நிலையில் இரவு நேரத்தில் வர மாட்டோம் என பிராஜ் லால் கூறியுள்ளார்.
அப்பொழுது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் சகோதரர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் காயமடைந்த நிலையில் அங்கிருந்த வாகனத்தில் இருவரையும் ஏற்றி கொண்டு 63 வேலம்பாளையம் காட்டுப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதில் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் பிராஜ் லால் காயங்களுடன் இருந்தார்.பிராஜ் லாலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த மங்கலம் போலீசார் ராஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு சென்ற காவல்துறையினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் (வயது 35),கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), கிருஷ்ணகிரியை சேர்ந்த முகமது சுபேர் (வயது 35), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விஜய் பாலாஜி (வயது 34) ஆகிய 4 பேரிடம் விசாரணை செய்ததில் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து மங்கலம் போலீசார் அவர்கள் நால்வரையும் கைது செய்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.