ஒரு செங்கலை கூட எடுக்கக் கூடாது… என்னை மீறி யார் வருவா…? திமுக எம்பியின் பேச்சால் மக்கள் உற்சாகம்…!!!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2024, 12:21 pm
ஒரு செங்கலை கூட எடுக்கக் கூடாது… என்னை மீறி யார் வருவா…? திமுக எம்பியின் பேச்சால் மக்கள் உற்சாகம்…!!!
வாணியம்பாடி அடுத்த மதானஞ்சேரி மற்றும் சி.வி.பட்டரை ஆகிய கிராமங்களில் புதியதாகப் பேருந்து நிழற்கூடம் அமைப்பதற்கான நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான பணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தொடங்கப்பட்டது. இதற்கான அடிக்கல் (பிப்.17) நாட்டும் பணி நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வருகை புரிந்தார். அப்போது, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது பகுதியில் பேருந்து நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் பட்டா நிலத்தையும் சேர்த்து, பேருந்து நிழற்கூடம் அமைக்க நிலத்தைக் கையகப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினர்.
“இங்கு பல ஆண்டு காலமாக வாழ்கிறோம். பேருந்து நிலையம் கட்டுவதாக சொல்லி அதிகாரிகள் எங்களை வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர். இதற்காக எங்களின் வீடுகளை எல்லாம் அளவிட்டு சென்றனர். நாங்கள் என்ன செய்வது எங்கு செல்வது,” என வேதனையுடன் முறையிட்டனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்பி கதிர் ஆனந்த், அவர்கள் முன்னிலையிலேயே வாணியம்பாடி வட்டாட்சியர் சிவபிராகசம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அரசு நிலத்தை எவ்வளவு வேண்டுமானாலும், எடுத்துக்கொண்டு பேருந்து நிழற்கூடம் கட்டுங்கள். ஆனால் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளில் ஒரு செங்கலையும் எடுக்கக்கூடாது என ஆணையிட்டார்.
மக்களின் குறைகளை கேட்டறிந்த திமுக எம்பி கதிர் ஆனந்த், முதல்வன் பட பாணியில் அதிரடியாக நடவடிக்கையில் ஈடுபட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றதுடன், உற்சாகமடைந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
0
0