தனது பெண் ஊழியரை பாலியல் இச்சைக்கு அழைத்த நாதக நிர்வாகி.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்!
Author: Hariharasudhan29 December 2024, 5:58 pm
தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நாதக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை அடுத்த உத்தண்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (42). இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநிலச் செயலாளராக உள்ளார். அது மட்டுமல்லாமல், இவர் கிண்டி மடுவின்கரையில் ஐடி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 6 மாதங்களாக வேலை செய்துள்ளார்.
இந்த நிலையில், அந்த இளம்பெண் தனது குடும்பத் தேவைக்காக சக்திவேலிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்த பணம் கொடுத்தல் உதவியின் மூலம், சக்திவேலுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு வரும்படி வெளிப்படையாகவே சக்திவேல் அழைத்ததாகத் தெரிகிறது.
ஆனால், அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால், அப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சக்திவேல், கடனாக கொடுத்த ரூ.2 லட்சத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். இதில், இளம்பெண்ணை மிரட்டியது உறுதிப்படுத்தப்பட்டதால், தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், நேற்றிரவு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் தனது நிறுவனத்தில் பணியாற்றி வேறு சில பெண்களுக்கு தொந்தரவு கொடுத்து உள்ளாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சக்திவேலின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.