தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள்.. மீண்டும் பணி ஆணை வழங்கக்கோரி தொடரும் ஸ்டிரைக்..!!
Author: Babu Lakshmanan7 ஏப்ரல் 2022, 5:03 மணி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது.
இந்த நிலையில் மார்ச் 31 அன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க, ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
நேற்று காலை தொடங்கிய இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு செவிலியர்கள் மயக்கமடைந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டும் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிநீக்க ஆணையால் திருவாரூர் மாவட்டத்தில் 37 செவிலியர்களும்,40 தொழில்நுட்பனர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
0
0