அரசு மருத்துவமனை முன் செவிலியர் எரித்து கொலை : நெல்லையில் பயங்கரம்.. விசாரணையில் பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan5 May 2023, 11:36 am
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தற்போது வேறு மதத்திற்கு மாறியதாக தெரிகிறது.
இவரது மனைவி அய்யம்மாள் இவர்களுக்கு மூன்று மகன்கள், கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.
இரண்டு மகன்கள் அய்யம்மாளுடனும், ஒரு குழந்தை பாலசுப்பிரமணியனுடனும் வசித்து வந்துள்ளனர். 45 வயதான அய்யம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
பணி நிமித்தமாக மருத்துவமனை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய அவர் அண்ணா நகரில் முக்கிய சாலையில் கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவியிடையே இன்று தகராறு ஏற்பட்டதாகவும், சாலையில் இருவரும் சண்டையிட்டு சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் கணவன் பாலசுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தியும், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார் என தெரியவந்துள்ளது.
வழக்கு பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாலசுப்ரமணியம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் ஒருவர் கணவரால் கொலை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.