‘என் தந்தைக்கு இல்லை.. எனக்கும் தரமாட்டீறாங்க’ ; அந்த ஒரு சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படும் மாணவி… கண்ணீர் மல்க புகார்..!!

Author: Babu Lakshmanan
27 February 2023, 8:55 pm
Quick Share

தந்தைக்கு இல்லாததால் தனக்கும் சாதி சான்றிதழ் தர மறுப்பதாகவும், கல்லூரியில் சாதி சான்றிதழ் கேட்டு வற்புறுத்ததாகவும் நெல்லையில் மாணவி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

நெல்லை மாவட்டத்தில் வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ரெட்டியார்பட்டி போன்ற இடங்களில் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருப்பினும், பலருக்கு தற்போது வரை சாதி சான்றிதழ் கொடுக்காததால் மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த இசக்கி என்பவரின் மகள் காளீஸ்வரி தனக்கு சாதி சான்றிதழ் கேட்டு கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

காளீஸ்வரி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், சாதி சான்றிதழ் கேட்டு கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, தனக்கு உடனடியாக அரசு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார்.

இது குறித்து மாணவி காளீஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- கல்லூரியில் சாதி சான்றிதழ் கொண்டு வரும்படி கேட்கின்றனர். எனக்கு கட்டாயம் சாதி சான்றிதழ் வேண்டும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே சாதி சான்றிதழ் கேட்டு அரசிடம் மனு அளித்து வருகிறேன். தற்போது வரை சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.

எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறார். எனவே சாதி சான்றிதழ் இருந்தால் தான் என்னால் தொடர்ந்து படிக்க முடியும். தந்தைக்கு சாதி சான்றிதழ் இல்லை என்பதால், எனக்கும் தர மறுக்கின்றனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

சாதியை ஒழிக்க வேண்டும் என காலங்காலமாக பேசி வந்தாலும் கூட, நடைமுறையில் அது சாத்தியமாகாது என்பதே மறக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் கல்லூரி மாணவி தனது படிப்பை தொடர முடியவில்லை. உதவித்தொகையும் பெற முடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் ஆட்சியிடம் மனு அளித்துள்ள சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 425

    0

    0