50 பேரன், பேத்திகளுடன் 90வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய மூதாட்டி : பாடல் பாடியும், நடனமாடியும் மகிழ்வித்த குடும்பத்தினர்…!!
Author: Babu Lakshmanan15 August 2022, 9:10 pm
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகநதி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து (60) – நகோமி (90) தம்பதியினர் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 6ஆண்கள், 2 பெண்கள் என 8 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நாகமுத்து கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இயற்கை எய்திய நிலையில், தாய் நகோமி தமது விவசாய பணி செய்து 8 பிள்ளைகளையும் வளர்த்து படிக்கவைத்து பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளார்.
தற்போது நகோமியின் பிள்ளைகள் ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனம் என அனைவரும் நல்ல பணிகளில் உள்ளனர். மேலும் நகோமிக்கு 22 பேரன், பேத்திகள் மற்றும் பூட்டன், பூட்டி என 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினருடன் இருந்து வருகிறார்.
இளம் வயதில் இருந்தே தனது பிள்ளைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக வேளாண் பணிகளில் ஈடுபட்டு வந்த, நகோமி கிராமத்தில் வீட்டில் கஞ்சி உள்ளிட்ட எளிமையான உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தாயார் நகோமியின் பிறந்தநாள் சுதந்திர தினத்தன்று இருப்பதால் நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் மற்றும் நகோமியின் 90வது பிறந்தநாளை அவரது பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், பூட்டன், பூட்டிகள் என அனைவரும் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள ஸ்டார் உணவகத்தில் கொண்டாடீனர்.
40க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்ட மூதாட்டி நகோமியின் 90ஆவது பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி, பிறந்தநாள் வாழ்த்து பாடல்களை பாடி உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக, நகோமியின் நீண்ட ஆயுளோடு வாழ்வேண்டி சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நகோமியின் பிள்ளைகள், மருமகள், மருமகன்கள், பேரக்குழுந்தைகள் மூதாட்டி நகோமியின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். மேலும் மூதாட்டி குறித்து கவிதைகளையும், பாடல்களை பாடினர்.
மூதாட்டி நகோமி வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மரியாதை செலுத்துவதையும், மருமகள் – மாமியர் இடையே எந்தவித கருத்து வேறுபாடின்றி வாழ்ந்து வருவதையும் எடுத்துரைத்தனர். தனது 90வயது பிறந்தநாள் விழாவை தனது பேரக்குழுந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களோடு கூடி கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணத்தை நினைத்து மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து மூதாட்டி நகோமியின் 90ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 90 மரக்கன்றுகளை நட்டுவைத்தும், 90ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.
தனது 90ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியது மகிழ்ச்சி என மூதாட்டி தெரிவித்தார். தங்களது மாமியார் தாயை போல இருந்துவருவதாகவும், தனது வாழ்நாளில் ஒருநாள் கூட மருமகள் – மாமியார் உறவில் எவ்வித கருத்துவேறுபாடின்றி இருந்ததாக மருமகள்கள் தெரிவித்தனர். தங்களது பாசத்தின் அடையாளம் எனவும், மதிப்பு மரியாதை வயது வேறுபாடின்றி கொடுப்பவர் என பேத்திகள் தெரிவித்தனர்.