ஜாமீனில் வெளியே வந்ததும் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. சிவகங்கையில் ஷாக்!
Author: Hariharasudhan15 January 2025, 12:56 pm
சிவகங்கையில், ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பள்ளத்துாரில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. மேலும், பள்ளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்பாண்டி (25). இவரது தந்தையான ராஜசேகர், அடிக்கடி மது அருந்தி வந்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ராஜேஷ்பாண்டி, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று இரவு, பள்ளத்துார் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதில் கடையில் இருந்த விற்பனையாளரான, இளையான்குடி அருகே உள்ளஇண்டங்குளத்தை சேர்ந்த அர்ச்சுனன் (46) படுகாயம் அடைந்தார்.
மேலும் கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களும் எரிந்து நாசமாகின. அது மட்டுமின்றி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த அர்ச்சுனன், 2023ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ராஜேஷ் பாண்டியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ராஜேஷ் பாண்டி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவ்வாறு வந்த ராஜேஷ்பாண்டி, நேற்று முன்தினம் இரவு அதே மதுக்கடைக்கு பெட்ரோலுடன் சென்று, குண்டு வீச முயற்சித்துள்ளார். எனவே, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: டீ குடிக்கச் சென்ற மாணவி.. சென்னை ஐஐடி கேண்டீனில் அருவருக்கத்தக்க சம்பவம்!
இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பள்ளத்துார் போலீசார், ராஜேஷ்பாண்டியை மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.