பாஜக நிர்வாகி மீது ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக புகார் … குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan26 February 2024, 10:05 pm
தூத்துக்குடி அருகே ரூ. 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு வீட்டை முழுமையாக கட்டி தராத பாஜகவைச் சேர்ந்த கட்டிட கான்டிராக்டரால், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மேல திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர்களான தந்தை ராமச்சந்திரன் மற்றும் மகன் பவித்ரன் ஆகியோர் செல்வத்திடம் தாங்கள் வீடு கட்டி தருவதாக கூறி, பல தவணைகளாக சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளனர். ஆனால், வீட்டை முழுமையாக கட்டாமல் மேல் கூரை அமைத்ததுடன் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செல்வம் வீட்டை முழுமையாக கட்டித்தர கூறியுள்ளனர். அதற்கு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களான ராமச்சந்திரன் மற்றும் பவித்ரன் ஆகியோர், இது தொடர்பாக நீங்கள் யாரிடம் வேண்டுமானால் புகார் அளியுங்கள், தாங்கள் வீட்டை கட்டித் தர முடியாது என்று கூறியதுடன், பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட செல்வம் தனது குடும்பத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து புகார் அளித்துள்ளார். இதைஅடுத்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை தொடர்ந்து, இன்று தனது மனைவி பொன் இசக்கி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்த கூலி தொழிலாளி செல்வம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து குடும்பத்தோடு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற சிப்காட் காவல் துறையினர் உடனடியாக 5 பேரையும் பிடித்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் விசாரணை நடத்தி அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது