மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த இருவரில் ஒருவர் மரணம்.. மற்றொரு இளைஞர் கைது!
Author: Udayachandran RadhaKrishnan30 May 2024, 1:01 pm
அன்னூர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர், ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23) என்கிற ராசு. இவரும் கோவை புலியகுளம், எரிமேடு பகுதியை சேர்ந்த திலீப் மேத்யூ (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக நண்பர்களாக பழகி வந்தனர்.
இதில் ராஜேஷ் என்கிற ராசு முன் கூட்டியே வழிப் பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது ராஜேஷ் மற்றும் திலீப் மேத்யூ இருவரும் சேர்ந்து வழிப் பறியில் ஈடு பட முடிவு செய்தனர்.
அன்னூரை அடுத்து உள்ள ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (55) என்பவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு கடந்த 22 – ம் தேதி (புதன்கிழமை) மதியம் ராஜேஷ், திலீப் மேத்யூ சென்றனர்.
அப்போது திலீப் மேத்யூ இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து உள்ளார். பின் புறமாக அமர்ந்து வந்த ராஜேஷ் கடைக்குள் திடீரென சென்று, மளிகை கடை உரிமையாளர் தனலட்சுமியிடம் சிகரெட் வேண்டும் என கேட்டு உள்ளார்.
தனலட்சுமியின் கவனம் வேறுபுறம் திரும்பிய நிலையில் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை ராஜேஷ் பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் சென்றனர்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் எடுத்த திடீர் முடிவு.. ஜாமீன் மனு வாபஸ் : நீதிமன்றத்தில் பரபரப்பு!
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னூர் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்தும், வாகன சோதனை நடத்தியும் விசாரணை நடத்தி வந்தனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரிடம் திலீப் மேத்யூ சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது ராஜேஷ் கடந்த 25 – ம் தேதி பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் பயணித்ததும், போதையில் கீழே தவறி விழுந்து பலியானதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, திலீப் மேத்யூவிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய டியூக் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.திலீப் மேத்யூவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அன்னூர் போலீசார் அடைத்தனர்.