ஒரு வயது குழந்தை கார் ஏற்றி கொடூரமாக கொலை.. திமுக பிரமுகர் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பின்னணி!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 6:16 pm

திண்டுக்கல் : ரெட்டியார் சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை செய்த திமுக கிளைச் செயலாளர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சில்வார்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்துசாமி மகன் பொன்னுச்சாமி (34). அவரது மனைவி சுமதி, இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து மகள் சாதனா (1) பிறந்துள்ளார். பொன்னுச்சாமி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

பொன்னுசாமியின் பக்கத்து வீட்டுக்காரர் ராஜேந்திரன் (50). இவர் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். பொன்னுச்சாமிக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பொன்னுச்சாமிக்கு ராஜேந்திரன் பல முறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 2:30 மணி அளவில் பொன்னுச்சாமி தனது இருசக்கர வாகனத்தில் தனது மகள் சாதனா மற்றும் அவரது அம்மா முத்து பிள்ளையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று உள்ளார். பேருந்து நிறுத்தத்தில் அவரது அம்மா முத்து பிள்ளையை இறக்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக அழகுபட்டி – திண்டுக்கல் சாலையில் பட்டத்து நாயக்கன்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, ராஜேந்திரன் காரில் எதிரே வந்துள்ளார்.

ராஜேந்திரனின் கார் வருவதை பார்த்த பொன்னுச்சாமி தனது வாகனத்தில் சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார். அப்பொழுது ராஜேந்திரன் தனது காரை தாறுமாறாக ஓட்டி சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பொன்னுச்சாமி மற்றும் அவரது ஒரு வயது குழந்தையான மகள் சாதனா மீது மோதியுள்ளார்.

அப்பொழுது வாகனம் மோதிய விபத்தில் பொன்னுச்சாமியும், குழந்தை சாதனாவும் ராஜேந்திரன் ஒட்டி வந்த காரின் அடியில் சிக்கிக் கொண்டனர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கல்லில் மோதி நின்றவுடன் அருகில் இருந்த மக்கள் ஓடி வருவதை பார்த்து ராஜேந்திரன் வாகனத்தை விட்டு விட்டு ஓடி தலைமறைவாகி விட்டார்.

அருகில் இருந்தவர்கள் வாகனத்தின் அடியில் சிக்கி இருந்த பொன்னுச்சாமியையும், குழந்தை சாதனாவையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் இந்த விபத்தில் குழந்தை சாதனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார் சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் இந்த சம்பவம் கொலையா ? அல்லது விபத்தா ? என்கிற கோணத்தில் வழக்கு பதிவு செய்து தலை மறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

பக்கத்து வீட்டுக்காரர் மீது கொண்ட முன்விரோதம் காரணமாக ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, அதை விபத்து வழக்காக மாற்ற முயற்சி செய்துள்ளதாகவும், ராஜேந்திரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதனாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்