இணையவழியில் குடிநீர் விநியோக கண்காணிப்பு திட்டம்: கோவையில் சோதனை முறையில் 400 வீடுகளுக்கு இணைப்பு…!!

Author: Rajesh
25 April 2022, 1:19 pm

கோவை மாநகராட்சியில் இணைய வழியில் முழு நேர குடிநீர் விநியோக கண்காணிப்பு திட்டத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பத் திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ்(EEE) துறையால் உருவாக்கப்பட்ட இணையவழி குடிநீர் விநியோக தொழில்நுட்பத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியில் இதனை செயல்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் குழுவினர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். மாநகராட்சியின் 17வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர், அபிராமி நகர் பகுதிகளில் உள்ள 400 வீடுகளுக்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 24 மணிநேர குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக 400 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. செல்போன் மூலம் குடிநீரின் தரம், சீரான அளவில் அனைத்து வீடுகளுக்கு செல்கிறதா என்பதை கண்காணிக்கபடுகிறது.

இந்தியாவிலேயே பொது குடிநீர் விநியோக திட்டத்தில் சீரான, 24 மணி நேர குடிநீர் வழங்க செல்போன் மற்றும் இணைய தளம் மூலம் கண்காணிக்கும் திட்டம் கோவையில் சோதனை அடிப்படியில் அமலாகி உள்ளது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா, இத்திட்டம் 2018ல் 2.5 கோடி மதிப்பில் இத்திட்டம் துவங்கப்பட்டதாகவும், இன்று மத்திய அரசு மற்றும் பி.எஸ்.ஜி இணைந்து தொழில்நுட்பத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதல்கட்டமாக 400 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இது இந்திய அளவில் முதல் திட்டம் எனவும் கூறினார். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ