‘போன் நோண்டியது போதும் தூங்குப்பா’… 14 வயது மகனை அதட்டிய தாய்… மொட்டை மாடிக்கு சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி!
Author: Babu Lakshmanan2 September 2023, 10:09 am
செல்போன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ம் வகுப்பு மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த பெரிய பாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர் வசந்த்குமார் உயிரிழந்த நிலையில், அம்மா கீதா உடன் ஒரே மகன் தாமு (எ) தாமோதிரன் (14) வசித்து வருகிறார்.
தாமோதரன் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, பள்ளி மாணவன் தாமு(எ) தாமோதிரன் எந்நேரமும் செல்போன் மூலம் பிரீ பையர் உள்ளிட்ட பல கேம்களை விளையாடி வந்துள்ளான்.
ஒரே செல்ல மகன் என்பதாலும் மகன் கேட்ட செல்போனை வாங்கி கொடுத்து இருக்கிறார் தாயார் கீதா.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான், தாமுவை தாயார் கீதா, ‘போன் நோண்டியது போதும் தூங்குபா’ என கூறியுள்ளார். ஆனால், ‘அம்மா நீ தூங்கு நான் தூங்குகிறேன் பிறகு’, என்று கூறியுள்ளான்.
கீதா தூங்கிய பிறகு, மொட்டை மாடிக்கு சென்று கேம் விளையாடி உள்ளான் தாமு. நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் தாய் கீதா மாடிக்கு சென்று பார்த்த போது, அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் மாணவன் தாமு உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
மேலும், மாணவன் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த மாணவன் தாமு பொதுவாக யாரிடமும் பேசாமலும், பழகாமலும் பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்ததாகவும், 6 மாதங்களாக அடிக்கடி கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. அதேசமயம், தாமுவின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது, செல்போன் முழுக்கவே கேம் இருந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம், நன்றாக படிக்கக் கூடியவராகவும் இருந்துள்ளார் தாமு என்பது குறிப்பிடத்தக்கது.