மீண்டும் காவு வாங்கும் ஆன்லைன் விளையாட்டுகள் : பணத்தை இழந்த வடமாநில பெண் தற்கொலை.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2022, 5:33 pm
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வடமாநில இளம்பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் பணத்தை இந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டதால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுவாக எழுந்துள்ளன.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட ஆப்களை தடை செய்து சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை செய்யப்படாமல் இருக்கிறது. அண்மையில், ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இளம்பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பந்தனா மாஜி, இவருடைய அஜய் மண்டல்குமார் ஆகிய இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பந்தனா மாஜியும் இவருடைய கணவர் அஜய் மண்டல்குமாரும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. பந்தனா மாஜி சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டில் 70,000 ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதனால், மிகுந்த கவலையிலும் மன உளைச்சலிலும் இருந்த பந்தனா மாஜி, வீட்டில் தனியாக இருந்தபோது, மின்விசிறியில் தனது சுடிதார் சாலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அருகே வசிப்பவர்கள் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கரிவலம்வந்தநல்லூரில் தங்கி வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் வேலை செய்துவரும் வடமாநில தொழிலாளர்கள் இடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.