ஒரு படமே எடுக்கலாம்… முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் சூரி நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 10:02 pm

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது.

கடந்த 19ம் தேதி தொடங்கிய முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி 27ம் தேதி நடைபெற்று வருகிறது.

இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் சூரி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட வந்தனர்.

முன்னதாக புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் சூரி, அமைச்சர் ரரகுபதியை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார்.

புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை நடிகர் சூரி பொறுமையாக பார்வையிட்டார்.

தொடர்ந்து மிசா காலகட்டத்தில் சிறையில் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை காட்சிப்படுத்தும் அரங்கை உணர்ச்சிப்பூர்வமாக பார்வையிட்டார்.

தொடர்ந்து புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டு கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் நடிகர் சூரியை கண்டதும் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். தொடர்ந்து அவரோடு கைகொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
முதல்வரின் 70 வது பிறந்தநாளை மிகப்பெரிய அரசியல் பயணத்தில் முதல்வர் கடந்து வந்த பாதையை சாதனைகளை பதிவு செய்து உள்ளனர்.

நாம் 14 வயதில் கண்மாயில் விளையாடி இருப்போம் ஓடியாடி விளையாடி இருப்போம், ஆனால் 14 15 வயதில் ஸ்டாலின் என்ற மாணவர் கட்சிக்கு பிரச்சாரம் செய்து, 15 வயதில் இளைஞர் திமுக என்ற ஒரு அமைப்பை உருவாக்கி 20 வயதில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து அதற்கு பின்பு அரசியல் பயணத்தில் எதிர்பாராத இன்னல்களை கடந்து வந்துள்ளார்.

மிசாவில் அவரை சிறையில் அடைத்து அவ்வளவு இன்னலுக்கு அவர் ஆளாயிருக்கிறார். அதற்கு பின்பு சினிமா துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தயாரிப்பாளராக நடிகராக தன்னை நிரூபித்து காட்டி அதன் பின்பு அரசியல் பயணத்தில் தொண்டர்களுடன் தொண்டராக உடன் கடைக்கோடி தொண்டனாக இருந்து பயணித்துள்ளார்.

36 வயதில் சட்டமன்ற உறுப்பினராகி 43 வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரராகி மிகப்பெரிய பதவியை மக்கள் கொடுத்தார்கள்.

மேயராக வந்த பின்பு சிங்காரச் சென்னை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி சிங்கார சென்னையில் பல பூங்காக்களை உருவாக்கி பல மேம்பாலங்கள் பல குறும்பாலங்கள் உருவாக்கி தூய்மை பணியாளர்களின் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு நவீன வசதிகளை உருவாக்கி கலைஞரின் ஆசியுடன் மக்களுக்கு செய்யக்கூடிய பணிகளை எந்த விதத்திலும் துவண்டு விடாமல் கடைசி வரை செய்தவர்.

மக்கள் முதல்வருக்கு உரிய இடத்தை கொடுத்து அழகு பார்த்து வருகிறார்கள்.இது மிகப்பெரிய விஷயம்.இது சாதாரண விஷயம் கிடையாது.

ஒவ்வொரு போட்டோவையும் பார்க்கும்போது ஒரு போட்ட சிரிக்க வைக்கிறது, ஒரு போட்டோ அழ வைக்கிறது, ஒரு போட்டோ பிரமிக்க வைக்கிறது, ஒரு போட்டோ கதை சொல்லுகிறது. ஒவ்வொரு படத்திலும் வரலாறு இருக்கிறது.

முதல்வர் கலைஞரின் மகன் எனக்கூறி பதவியை தக்க வைத்து முதல்வராக உட்காரவில்லை. கடைக்கோடி தொண்டர்களாக கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 14 வயதில் இருந்து உழைத்து உழைத்து இந்த இடத்தில் முதல்வரா ஆகி இருக்கிறார்.

சரியான தகுதியான சீட்டில் தகுதியான முதல்வர் அமர்ந்து இருக்கிறார். கட்சியில் உழைத்திருக்கிறார் முதல்வராக வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தோம் ஆனால் இந்த புகைப்படம் பார்த்த பின்பு கதைகளை கேட்ட பின்பு இவ்வளவு உழைப்பா? இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாரா? என்று பிரமிக்க வைக்கிறது.

சென்னையில் வெள்ளம் வந்த போதும் அவ்வளவு உழைப்பு உழைத்தார், கொரோனாவின் போது கடவுளாக வந்து கொரானா உடையை அணிந்து மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனைக்குள் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியும் கூட அதையே மீறி மருத்துவமனைக்குள் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்லி வந்தார்.

கலைஞர் பக்கத்தில் இருந்து கடைசி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் முதலில் அப்பா என்று அழைக்கட்டுமா என்று கேட்ட அந்த புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.

கலைஞரை ஸ்டாலின் கடைசி வரை தலைவராக பார்த்தார். அதற்கு பின்பு கலைஞர் இறந்த போது மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு வந்தது முதல்வர் ஸ்டாலின் அப்படியே சிலையாக அமைதியாக நிற்கிற அந்த புகைப்படம் இந்த இரண்டு புகைப்படமும் என்னை கலங்க வைத்தது.

முதல்வருக்கு அமைச்சர்கள் பில்லர்கள் மாதிரி இருப்பதனால் இந்த கட்சி இந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறது.

நம் முதல்வர் ஸ்டாலினின் வரலாறை தாராளமாக ஒரு படமாக எடுக்கலாம். கொஞ்ச காலம் பின்பு கண்டிப்பாக முதல்வர் அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பார்கள் என பேசினார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 429

    0

    0