‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’: போதைப் பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம்…டிஜிபி சைலேந்திர பாபு வார்னிங்..!!

Author: Rajesh
29 March 2022, 4:19 pm

சென்னை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கஞ்சா வேட்டை நடத்துவது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நடவடிக்கையை, இன்று இருந்து ஏப்ரல் 27 வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும். கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலி தொடரை உடைக்க வேண்டும். போதை பொருள் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.


ரயில்வே போலீசார், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும். போதை பொருள் விற்பவர்கள், பின்னணியில் இருப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தப் பணிகளை, மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், போதை பொருள் ஒழிப்பு பணியில் நேரடியாக கவனம் செலுத்தி அறிக்கை தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!