முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ் : புழல் சிறை வளாகத்தில் குவிந்த அதிமுகவினர்!!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2022, 11:32 am
சென்னை : புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை, புழல் சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் சென்றனர்.
ஜெயக்குமார் கைது நடவடிக்கை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்திக்க அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வருவதையொட்டி முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் சிறை வளாக நுழைவு வாயில் முன்பு குவிந்துள்ளனர்.