மண்ணென்ணை விளக்கு தான் எங்கள் வாழ்க்கை.. இருளில் தவிக்கும் விரட்டகரம் கிராமம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?!
Author: Udayachandran RadhaKrishnan22 July 2024, 7:26 pm
திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் பல தலைமுறைகளாக மின்சார வசதியின்றி பரிதவிக்கும் சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் பள்ளிச் சிறுவர்கள் மன்னனை விளக்கு ஏற்றி படித்து வருகிறார்கள்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வீரட்டகரம் கிராமத்தில், பல தலைமுறைகளாக மின்சார வசதியின்றி, சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
வீரட்டகரம் கிராமத்தில் கடலூர் செல்லும் சாலையோரம், ஐந்துக்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இன்று நேற்றல்ல, இவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், இவர்கள் இரவு நேரங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக, மண்ணென்ணை விளக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, விஜயகுமாரி கூறியதாவது: சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை ஆக்கிரமித்து வெட்டப்பட்டுள்ள கிணறுகளுக்கும் மின் மோட்டார் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையோரம் அரசுக்குச் சொந்தமான இடத்தில், பல தலைமுறைகளாக வீடுகட்டி வசித்து வரக்கூடிய எங்களுக்கு, மின்வாரிய அதிகாரிகள் தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் பாட்டி கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க அரசியல்வாதிகள் வருகிறார்கள். அப்போது, எங்கள் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறுகிறார்கள்.
தேர்தல் முடிந்ததும் அவர்கள் எங்களை மறந்து விடுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளை போலவே, அரசியல்வாதிகளும் எங்களை வஞ்சிப்பது, வேதனையாக உள்ளது.
இது மட்டுமின்றி, சிவகாமி கூறியபோது, மின்சார வசதி இல்லாததால் பள்ளியில் படிக்கும் எங்கள் குழந்தைகள் இரவு நேரங்களில் மண்ணென்ணை விளக்கை பயன்படுத்தி, படிக்கிறார்கள்.
அப்படி படிக்கும்போது, அவர்களுக்கு புத்தகத்தில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை என்று ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை நாங்களும் படிக்கவில்லை எங்களது குழந்தைகளாவது படிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை கூறுகிறார்கள்.
எனவே, மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு, மகத்தான பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, சலுகைகளை அறிவித்து, செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் அவர்கள், சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் மீது கருணை கொண்டு, எங்கள் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் வீடுகளுக்கு தற்காலிகமான முறையில் மின் இணைப்பு வழங்க, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்