கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவன் உயிரிழப்பு : 3 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்..

Author: kavin kumar
29 January 2022, 9:07 pm

கோவை: கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் காரில் பயணம் செய்த மூன்று இளம்பெண்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கோவை அடுத்த செட்டிபாளையத்திலிருந்து நெகமம் நோக்கி சென்ற கார் ஒன்றில் 5 இளைஞர்கள் மற்றும் 3 இளம் பெண்கள் என 8 பேர் பயணித்துள்ளனர். கார் செட்டிபாளையம் அடுத்த பெரிய குயிலி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி தலைகுப்புறகவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நீல்ஜார்ஜ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த போத்தனூரைச் சேர்ந்த பிஜேஷ், சேது,வசந்த் மற்றும் 3 இளம் பெண்கள் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிபாளையம் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த கார்த்திக் என்ற நபர் மட்டும் காயங்களின்றி தப்பினார். சம்பவம் தொடர்பாக போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில் 8 பேரும் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் என்பதும், கார் ஓட்டி பழகும் போது எதிரே வந்த லாரி மீது மோதல் இருக்க திருப்ப முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2669

    0

    0