ஓசியில் பைக் பழுது? ஒர்க் ஷாப் உரிமையாளரை அடித்த எஸ்ஐ.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

Author: Hariharasudhan
6 January 2025, 3:27 pm

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் ராயல் என்பீல்ட் பைக்கை பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். அதேபோல், பாலமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அண்ணாதுரை. இவர் ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, எஸ்ஐ அண்ணாதுரை சீனிவாசனின் ஒர்க் ஷாப்பில் பைக்கை சர்வீஸுக்கு விடுவதும், அதற்கு பணம் கொடுக்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு வருவதும் வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிலுவைத் தொகையே 8,600 ரூபாயாக உள்ளதாக சீனிவாசன் கூறுகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சக காவலரைக் கொண்டு ராயல் என்பீல்டு பைக்கை ஒர்க் ஷாப்பில் விடுமாறு கூறியுள்ளார். இதன்படி அந்த காவலரும் சீனிவாசன் நடத்திவரும் கடைக்கு வந்து வாகனத்தை விட்டுள்ளார். அப்போது பழைய பாக்கியே அதிகமாக இருக்கிறது என்றும், அதனை கொடுத்துவிட்டு இதற்கு பழுது பார்க்கலாம் எனவும் சீனிவாசன் கேட்டுள்ளார்.

Palamedu SI slapping video

இது தொடர்பான தகவல் அண்ணாதுரைக்குச் சென்றபின், எஸ்ஐ அண்ணாதுரை போன் மூலம் அழைத்து சீனிவாசனை மிரட்டி உள்ளதாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த அண்ணாதுரை, சீனிவாசனின் கடைக்கு வந்து அவரை அடித்து காரில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: திடீர் பயம் காட்டும் HMPV வைரஸ்.. அறிகுறிகள் என்னென்ன? உண்மையில் உலகத்தொற்றா இது?

தற்போது இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய இடத்திற்கு சீனிவாசன் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதேநேரம், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உன்னை சிறையில் அடைத்து விடுவேன் என எஸ்ஐ அண்ணாதுரை மிரட்டியதாகவும், சீனிவாசன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 114

    0

    0

    Leave a Reply