சிறுமியை கேலி செய்த இளைஞர்கள்… கண்டித்த நரிக்குறவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் : பழனி அருகே பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
5 July 2022, 10:00 am

பழனியருகே சிறுமியை கேலி செய்த இளைஞர்களை கண்டித்ததால் ஆவேசமடைந்த இளைஞர்கள்‌ கற்களை வீசி தாக்கியதில் பத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது‌ பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் 13 வயது சிறுமியை, அதே பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேலி செய்ததாக தெரிகிறது.

கேலி செய்த‌ இளைஞர்களை, சிறுமியின் உறவினர்கள் சிலர் கண்டித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால், ஆவேசமடைந்த இளைஞர்கள்‌ கண்மூடித்தனமாக கற்களை எடுத்து வீசியதில் நரிக்குறவர்‌ இனத்தை சேர்ந்த பெண்கள்‌ மற்றும் ஆண்கள் என பத்திற்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்தது. மேலும் சிலரின் முகங்களில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து காயமடைந்த அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த பழனி தாலுகா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் ஆடைகள் களையப்பட்டு‌ கொடூரமாக கொலை செய்தவர்களை போலீசார் தேடிவரும் நிலையில், தற்போது 13வயது சிறுமியை இளைஞர்கள் கேலி செய்ததும், அதை கண்டித்தவர்கள்‌ மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?