பழனி கோவில் மலை அடிவாரத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் ; பக்தர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

Author: Babu Lakshmanan
17 January 2024, 9:43 pm

பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி திருத்தொண்டர் பேரவை ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளையும் முறையாக அகற்றப்படவில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து இருந்தார்.

அதில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், அதனை கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், பழனி அடிவாரம் பகுதியில் தினமும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, அடிவாரம் பகுதியில் வர்த்தகர்களை கஷ்டப்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி நாளை முதல் அடிவாரம் மற்றும் சன்னதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அடிவாரம் வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதில், கடந்த 15 நாட்களாக அடிவாரம் பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பக்தர் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அடிவாரம் வர்த்தக சங்கத்தினர் மற்றும் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டதாகவும், இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பேரில் தினசரி வர்த்தகர்களை கஷ்டப்படுத்தும் விதமாக செய்து வருகின்றனர்.

நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு கடை அடைப்பு போராட்டம் நாளை காலை 9 மணிக்கு துவங்கப்படும் என்றும், ஒட்டுமொத்த வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து கடையடைத்து தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கை விடுப்பதாகவும், இது கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எங்களது கோரிக்கையை பரிசினை செய்து எந்த ஒரு தடையின்றி வர்த்தகம் செய்ய பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்வதால் கூறி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பழனி கோவிலுக்கு நாளை முதல் வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பேன்சி கடைகள், சாமி பட விற்பனை செய்யும் கடைகள், பாத்திரம் விற்பனை செய்யும் கடைகள் என ஏராளமான கடைகள் அடைக்கப்படுவதால், பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 497

    0

    0