புது புது ரூல்ஸ் …பழனி கோவிலில் நாதஸ்வரம், தவில் வாசிக்க தடை… ஊழியர்களுடன் பக்தர்கள் கடும் வாக்குவாதம்!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 6:10 pm

பழனி கோவிலுக்கு நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் பக்தர்கள் வாக்குவாதம் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் பழனி தைப்பூச திருவிழா வருகின்ற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 25 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி தற்போதையிலிருந்து பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இன்று கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு நாதஸ்வரம் , மேளங்கள் வாசித்தபடி கிரிவலப் பாதையில் வந்து படிப்பாதை வழியாக மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் முயன்ற போது, கோவில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பழனி கோவிலில் பணிபுரியும் நாதஸ்வர, தவில் ஊழியர்களை தவிர வேறு நபர்கள் நாதஸ்வரம், மேளம் அடித்து மலைக்கோவிலுக்கு வர அனுமதி இல்லை என்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது, பக்தர்கள் 48 வருடமாக வந்து கொண்டிருக்கும் எங்களுக்கு, புதிதாக நாதஸ்வரம், மேளம் அடிப்பதற்கு அனுமதி இல்லை எனக் கூறுவது சரியானது அல்ல என்று அரசாணை காண்பிக்க சொல்லி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில், “மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆண்டுதோறும் மேளதாளங்கள் முழங்க மலைக்கோவிலுக்கு சென்று வரும் நிலையில், திடிரென நாதஸ்வரம், மேளம் வாசிக்க தடை விதித்துள்ள சம்பவம் தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் மேளதாளங்கள் வாசிக்க அனுமதி வழங்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பறை இசைக்கக் கூடாது என்றும், நாதஸ்வரம், மேளம் மட்டும் அடித்துச் செல்லலாம் என இதற்கு முன்னாள் இருந்த இணை ஆணையர் நடராஜன் உத்தரவிட்டிருந்தார். தற்போது பறை இசைப்பதற்கும் நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்க தடை விதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!