பழனியில் PFI நிர்வாகி கைது… 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை… திண்டுக்கல்லில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan17 January 2023, 4:23 pm
பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் முகமதுகைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் பழனி காந்திரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்து பழனி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அங்குள்ள போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை, கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பலரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பழனியை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் sdpi கட்சி சார்பில் பழனி சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.