அரசு அதிகாரியை ஓட விட்ட வியாபாரிகள்.. சாலையோர கடைகள் அகற்றிய போது பெண்ணின் தாலியை இழுத்த உதவி ஆணையரால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2022, 2:32 pm
பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையோரம் வியாபாரம் செய்து வந்த பெண்ணின் தாலிச் சங்கிலியை, உதவி ஆணையர் லட்சுமி இழுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர்களையும் பொது மக்களையும் உதவி ஆணையர் லட்சுமி மிகவும் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் வியாபாரிகளை உதவியாணையர் லட்சுமி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் உதவி ஆணையர் லட்சுமியை சிறைபிடித்தனர்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர்களிடம் திமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்ததால் கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான பிரச்சனைகள் பட்ட தள்ளுமுள்ளுவில் கவுன்சிலர்களுக்கும் காயம் ஏற்பட்டு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் உதவி ஆணையர் லட்சுமியை மீட்டு பத்திரமாக தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தற்பொழுது பழனி கோவில் தேவஸ்தான அலுவலகம் முன்பு வியாபாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.